லாபம் தரும் அப்பளம் ஏற்றுமதி!
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் உணவுப் பொருட்களில் மிக முக்கியமானதாகத் திகழ்கிறது அப்பளம். இன்றைய நிலையில் அப்பளத்தின் ஏற்றுமதி எப்படி இருக்கிறது, அதிக ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ள நாடு எது, எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி எப்படி இருக்கும்?
பல நாடுகளில் வரவேற்பு!
—————————-
இன்றைய நிலையில் தமிழ்நாட்டிலிருந்து மட்டும் 103 நாடுகளுக்கு அப்பளம் ஏற்றுமதி ஆகிறது.|
வட இந்தியாவிலிருந்து அப்பளம் ஏற்றுமதி செய்தாலும், மெட்ராஸ் அப்பளத்துக்கு வரவேற்பு அதிகம். முக்கியமாக, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவின் மொத்த அப்பள ஏற்றுமதியில் 80% ஏற்றுமதி செய்யப்படுகின்றன.தற்போது, ஆப்பிரிக்க நாடுகள் அப்பள ஏற்றுமதிக்கு புதுச் சந்தையாகத் திகழ்கிறது. அப்பளம் தரமானதாகவும், சுவை நிலையானதாகவும் இருப்பின் ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்” என்றார் அவர்.
அதிகரிக்கும் உற்பத்தி!
———————-
அப்பளம் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவரும் மதுரை அனகாமஸ் மேனுஃபேக்சரிங் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.மீனாட்சி சுந்தரேஸ்வரர் இந்தத் தொழிலின் நெளிவுசுளிவுகள் பற்றி எடுத்துச் சொன்னார்.
“உலக நாடுகளில் அப்பளத்தின் தேவையானது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இதனால் இந்தியாவில், குறிப்பாக, மதுரையில் 15-20% வரை அப்பளத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஏற்றுமதி ஆர்டர்களும் நன்றாகக் கிடைத்து வருகின்றன.
நாங்கள் மூன்று தலைமுறைகளாகவே அப்பளம் உற்பத்தி செய்து வருகிறோம். என் தந்தைக்குப் பிறகு, அப்பளம் உற்பத்தி என் கைக்கு வந்தபோது, உள்நாட்டில் மட்டும் அப்பளத்தை விநியோகம் செய்யாமல், ஏற்றுமதியில் ஈடுபட்டால் இன்னும் நம்மால் அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்று தோன்றியது. அதன் பிறகே கடந்த 2007-ல் அனகாமஸ் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்து, மீனாஸ் என்கிற பிராண்ட் பெயரில் வகை வகையான அப்பளங்களை ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தேன்.
தரமான தயாரிப்பு!
———————-
1970-களிலெல்லாம் மதுரையில் சிந்தாமணி, ஜெயந்திபுரம் மற்றும் சென்னையில் கூடுவாஞ்சேரி மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில்தான் அப்பளமானது உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், இன்று தமிழகத்தில் பல இடங்களில் அப்பளம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிலானது காணப்படுகிறது. அதேபோல, முன்பு கைகளால் தயாரிக்கப்பட்டுவந்த அப்பளமானது, இன்று 80% இயந்திரங்களின் உதவியுடன் வேகமாகவும், தரமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டவர் விருப்பம்!
——————————-
பொதுவாக, கறுப்பு உளுந்தினால் தயாரிக்கப்படும் அப்பளம்தான் தமிழகத்தின் சிறப்பு. இதை மெட்ராஸ் அப்பளம் என்கிற பெயரிலேயே வெளிநாட்டவர்கள் அழைக்கிறார்கள். இதற்கே அதிகமான மவுசு பல நாடு களில் இருக்கிறது. நாங்கள் ஹெர்பல், வெண்ணிலா, பட்டர் ஸ்காட்ச் என வெளிநாட்டவர் விரும்பும் 72 வகை யில் அப்பளங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறோம்.
ஹலால் சான்றிதழ்!
———————
அரபு நாடுகளுக்கு அப்பளம் ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள், அதற்கு ஹலால் சான்றிதழ் பெறுவது அவசியம். இந்தச் சான்றிதழின் அர்த்தம், நாம் தயாரிக்கப்படும் அப்பளம் சுத்தமானது என்பதுதான். இந்தச் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு அப்பளங்களை ஏற்றுமதி செய்யும்போது, இந்தச் சான்றிதழ் பெற்றிருந்தால், ஏற்றுமதி ஆர்டர்கள் எளிதாகக் கிடைக்க வாய்ப்பு அதிகம்” என்றவர், அப்பளம் தயாரிப்பில் உள்ள நடைமுறை விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மூன்று மாதங்கள் வரை!
—————————
“அப்பளத்தை உற்பத்தி செய்து ஏற்றுமதியாளர்களுக்கு அனுப்பி, அதை அவர்கள் பெறுவதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் ஆகிவிடும். அதை அவர்கள் வைத்திருந்து பயன்படுத்த வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் 90 நாட்கள் வரை நாம் தயாரிக்கும் அப்பளங்கள் கெடாமல் இருக்க வேண்டும். சுத்தமான உளுந்தில் அப்பளங்களைத் தயாரிக்கும்போது அந்த அப்பளம் 90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அப்பளங்களை உற்பத்தியாளர்களிடம் வாங்கி ஏற்றுமதி செய்பவர்கள் கவனிக்க வேண்டியது சுத்தமான, தரமான முறையில் அப்பளம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதைத்தான்.
சுவை, வடிவம், நிறம்!
—————————
அப்பளத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டவர்கள் எதிர்பார்க்கும் விஷயம், அதன் வடிவம் ஒரேமாதிரி இருக்க வேண்டும்; அதன் நிறம் வெண்மை யாகவும், எண்ணெய்யில் பொரிக்கும்போது அதிகமாக விரிவடையும் தன்மையுடனும் இருக்க வேண்டும். முக்கியமாக, சுவையுடன் தரமானதாக இருக்க வேண்டும் என்பதே. இந்த எதிர்பார்ப்புகளை உற்பத்தியாளர்கள் பூர்த்திசெய்ய வேண்டுமெனில், தரமான உளுந்தைப் பயன்படுத்த வேண்டும். இதில் எந்த சமரசமும் கூடாது. மாவு பிசையும் தன்மை மற்றும் வேலைபாடுகள் சிறப்பான தாக இருக்க வேண்டும்” என்றவர், வெளிநாடுகளில் அப்பளத்தின் நுகர்வு எப்படி இருக்கிறது என்றும் சொன்னார்.
அதிகரிக்கும் நுகர்வு!
————————
“உலக நாடெங்கிலும் அப்பளத்தின் நுகர்வு அதிகமாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு, மலேசியாவில் வாழும் மக்கள்தொகையில் சுமார் 9% பேர் தமிழர்கள், 30% பேர் சீனர்கள், 60% பேர் மலேசியர்கள். முதலில் தமிழர்கள் மட்டுமே அப்பளத்தை உணவுகளில் சேர்த்து வந்தார்கள். ஆனால், தற்போது சீனர்கள் மற்றும் மலேசிய மக்களில் பெரும்பாலானவர்கள் அப்பளத்தைத் தங்களது உணவுகளில் சேர்ப்பதால், அங்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல, மியான்மரில் அப்பளம் என்பதே என்னவென்று தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது அவர்களும் அப்பளத்தைத் தங்களது உணவுகளில் சேர்த்து வருகிறார்கள். இப்படியாக நாளுக்கு நாள் அப்பளத்தின் நுகர்வு உள்நாட்டில் மட்டுமல்லாது, அயல்நாட்டிலும் அதிகரித்து வருவதால் இதற்கான ஏற்றுமதி வாய்ப்புகள் பெருகி வருகிறது” என்றார்.
சுத்தமும் தரமும் முக்கியம்!
————————
உற்பத்தியாளர்களிடமிருந்து அப்பளங்களை வாங்கி ஏற்றுமதி செய்துவரும் மதுரையைச் சேர்ந்த ஏ.சம்பத்குமாருடன் பேசினோம்.
“நான் கடந்த 18 ஆண்டுகளாகவே உற்பத்தியாளர் களிடமிருந்து வகை வகையான அப்பளங்களை வாங்கி சிங்கப்பூர், மலேசியா, குவைத், ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். அப்பளத்தின் சுவையும், தரமும் ஒரேமாதிரி இருக்க வேண்டும் என்பதால், மதுரையில் உள்ள இரண்டு அப்பள உற்பத்தியாளர்களிடம் மட்டுமே தொடர்ந்து அப்பளங்களை வாங்கி ஏற்றுமதி செய்து வருகிறேன். மாதத்துக்கு 10 - 20 டன் அப்பளங்களை வாங்கி, ஓவியம் மற்றும் மம்மி-டாடி என்கிற பிராண்ட் பெயரில் ஏற்றுமதி செய்து வருகிறேன்.
அப்பளத்தை சொந்தமாகத் தயாரிக்காமல், பிறர் தயாரித்ததை வாங்கி ஏற்றுமதி செய்பவர்கள், அது தரமாகவும் சுவையாகவும் இருக்கிறதா என்று பார்ப்பது மிக அவசியம். தவிர, அதன் மொறு மொறுப்பு 2 மணி நேரம் வரை நீடிக்க வேண்டும்.
முதலில் இறக்குமதியாளர்களை கண்டுபிடித்து அவர்களிடம் பலமுறை பேசி, அவர்களது நாடு களுக்குச் சென்று சந்தித்து நம்பகத்தன்மையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். அதன்பிறகே அவர்களிடமிருந்து ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கும். உற்பத்தியாளர்களிடம் இருந்து அப்பளங்களைப் பெற்று, அதன் தரத்தைக் கூட்டி உங்களுக்கு வழங்குகிறோம் என்கிற உத்தரவாதத்தையும் தந்தால் ஆர்டர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். இன்னொரு முக்கியமான விஷயம், அப்பளத்துக்கான தரச் சான்றிதழ். இதுவே, நமது ஏற்றுமதி ஆர்டர்களுக்கு உறுதுணையாகும்”
அதிக முதலீடும், பெரிய அளவில் இயந்திரங் களும் தேவை இல்லை என்பதால், பலரும் அப்பளம் ஏற்றுமதி செய்து லாபம் பார்க்கலாமே!
via: Nanayavigadan
அயல்நாடுகளில் வேலைசெய்து கொண்டு இருக்கிறீர்களா? புதிய ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா நீங்கள்? முன்னனுபவம் மற்றும் தொழில் உலக தொடர்பு உள்ள நல்லதொரு ஆலோசகரை நியமித்து கொண்டு அவர்களிடம் நேரடியாக நடைமுறை தொழில் பயிற்சியை பெற்று பின்னர் தொழிலை துவங்கலாம். பலர் எந்த ஒரு தொழில் தொடர்பும் இல்லாமல் ஏற்றுமதி இறக்குமதி தொழில் துவங்கி பல்வேறுபட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடியாமலும் தகுந்த நேரத்தில் தகுந்த முடிவை எடுக்க தெரியாமலும் தொழிலை விட்டு விலகி வழக்கம் போல மாதசம்பள வாழ்கைக்கேய சென்று விடுகிறார்கள்.
ஓம் முருகா நிறுவனர் ராஜன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு நேரடி தொழில் பயிற்சியை வழங்கி வருகிறார். அவருடைய நேரடி தொழில் பயிற்சியின் மூலம் பயனடைந்த தமிழர்கள் தொழில் அதிபர்களாக வாழும் நாடுகள் அமெரிக்கா, ஈகுவடார், பிரேசில், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், சீனா, பிலிப்பைன்ஸ். 25/07/2024 அன்று நேரடி தொழில் பயிச்சி அளிப்பதற்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூ சிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். உங்கள் பொருள்களை நேரடியாக சந்தைப்படுத்தவும் ராஜன் அவர்களை வாட்சப் மூலம் தொடர்பு கொள்ளலாம். +65 90765060