தூத்துக்குடியில் உள்ள மீன் ஏற்றுமதி நிறுவனத்தின் மின்னஞ்சலை பயன்படுத்தி, ரூ.6.25 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் உணவு நிறுவனம் வெளிநாடுகளுக்கு இறால், கனவா போன்ற மீன்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் செல்வின் பிரபு, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயா பிரின்ஸிடம் அளித்த புகார் மனு விவரம்:
இத்தாலியில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கடந்த 15 ஆண்டுகளாக இறால், கனவா மீன்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 14 சரக்குப் பெட்டகங்களில் மீன்களை ஏற்றுமதி செய்த நிலையில் அதற்கான தொகை ரூ.6.25 கோடி இதுவரை எங்களுக்கு வந்து சேரவில்லை.
இதையடுத்து, அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டபோது பணத்தை இங்கிலாந்தில் உள்ள ஒரு வங்கியில் செலுத்திவிட்டதாகவும், அதற்கான அனைத்து ரசீதுகளும் தங்களிடம் உள்ளதாகவும் கூறினர்.
எங்களது மின்னஞ்சலை யாரோ தவறாகப் பயன்படுத்தி இத்தாலி நிறுவனத்திடம் இருந்து ரூ.6.25 கோடி பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.