ஜப்பான் நாட்டுக்கான, இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பில், 32 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தால், கடந்த 3 ஆண்டுகளாக, படிப்படியாக ஏற்றுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
நம் நாட்டின் ஏற்றுமதியில் ஜவுளித்துறை பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பாரம்பரிய சந்தைகள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ள புதிய சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதிலும், இத்துறையினர் முனைப்புடன் செயல்படுகின்றனர். உலகளாவிய ஜவுளி இறக்குமதியில், ஜப்பான் நாட்டின் பங்களிப்பு அபரிமிதமானதாக உள்ளது. ஆயினும், பல்வேறு கட்டுப்பாடுகளால் அந்நாட்டுக்கான ஆடை ஏற்றுமதியில், ஜவுளி துறையினர் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்நிலையில், இந்தியா - ஜப்பான் இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி வாயிலாக சர்வதேச அளவில் ஏராளமான நாடுகளுடன் திருப்பூர் தொடர்பு கொண்டுள்ளது. வரும் 2020க்குள் பின்னலாடை வர்த்தக மதிப்பு, ரூ.1 லட்சம் கோடியை எட்டுவதற்கு தொழில் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அத னால், ஜப்பான் நாட்டு ஆர்டரை கைப்பற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.இதன் காரணமாக, ஜப்பான் நாட்டுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, அந்நாட்டுக்கான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், அந்நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி இறக்குமதி, 2014ல் 5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜப்பானுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி ஏற்றுமதி பங்களிப்பு, 2014ல், 10 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2013ல், ஜப்பான் நாட்டுக்கான, இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு 2.93 கோடி டாலராக இருந்தது; இது, 2014ல், 3.86 கோடி டாலராக வளர்ச்சி அடைந்து, 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறியதாவது:ஜப்பான் நாடு, தனது ஆடை தேவையை சீனா ஆடைகளை இறக்குமதி செய்வதன் மூலம் நிறைவேற்றி வருகிறது. இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், கடந்த 3 ஆண்டுகளாக, அந்நாட்டுக்கான ஏற்றுமதியில் படிப்படியான வளர்ச்சி காணப்படுகிறது. அந்நாட்டின் ஜவுளி சந்தையில் இந்திய பின்னலாடைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதனாலேயே, ஜப்பான் நாட்டுக்கான பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 2014ல், 32 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி வாய்ப்பை பெற்றுத்தர ஏ.இ.பி.சி., வாயிலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாய்ப்பை பயன்படுத்தி, ஜப்பான் நாட்டு ஆடை உற்பத்தி ஆர்டரை கைப்பற்ற திருப்பூர் தொழில் துறையினர் முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
For Export Support Contact: +919943826447, tamilembassy@gmail.com