இந்தியாவின், ‘அல்போன்சா’ ரக மாம்பழங்களுக்கு கடந்த, ஏப்ரலில், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதன் தொடர்ச்சியாக, பச்சை மிளகாய், காய்கறிகளுக்கு, அரபு நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. இவற்றில், ரசாயனம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் அதிகம் இருப்பதால் தடை செய்ததாக, அந்நாடுகள் அறிவித்துள்ளன.
வெளிநாடுகளில், உணவை தரமறிந்து சாப்பிடுகின்றனர். ஆனால், இந்தியாவில், வயிற்றை நிரப்புவதற்காக சாப்பிடுகிறோம். தரத்தைப்பற்றி, நாம் கவலைப்படுவது இல்லை. இங்கு, ‘கார்பைடு’ மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதற்கு கூட ஆட்கள் இருக்கத் தான் செய்கின்றனர். வெளிநாடுகளில், செயற்கை உரங்களுக்கு, பதில் மண்புழு கழிவு, தென்னைநார் கழிவு, தாவரக்கழிவு, விலங்கின கழிவு, கரும்பு சக்கை, கோழிபண்ணை கழிவுகள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை பயன்படுத்துகின்றனர்.அவை நமக்கு அதிகளவில் கிடைத்தாலும், 75 சதவீதம் அளவிற்கு, செயற்கை உரங்களை பயன்படுத்துகிறோம். மகசூல் அதிகம் கிடைக்கும் என்பதால், இதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், பழங்களில் தான், ரசாயன கலப்பு அதிகளவில் உள்ளதாக, வெளிநாடுகளில் தடை விதிக்கப்படுகிறது.
இனியாவது, விவசாயிகள், இயற்கை உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். வேளாண் துறையும், இதை ஊக்குவிக்க வேண்டும். மேலும், காய்கறி ஏற்றுமதிக்கு முன், தரக்கட்டுப்பாடு செய்வது அவசியம். இதற்காக, காய்கறிகள் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் மாவட்டங்களில், ஆய்வகங்களை அரசு அமைக்கவேண்டும்.இதன்மூலம், விவசாயிகளுக்கு ஏற்படும், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை தடுக்க முடியும்.